அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள்
பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூருக்கு அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருக்கோவிலூர்
மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. உடனே சந்தேகத்தின் பேரில் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் ஏராளமான புகையிலை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. மர்மநபர்கள் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்தி வரும் வழியில் போலீசுக்கு பயந்து அப்படியே விட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து புகையிலை பொருட்கள் இருந்த பையை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.