ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பித்த இளைஞர்களுக்கு நீச்சல் போட்டி
விழுப்புரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பித்த இளைஞர்களுக்கு நீச்சல் போட்டி கடலூரில் நடந்தது
கடலூர்
விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு உதவியாக ஏற்கனவே 34 ஊர்க்காவல் படையினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். தற்போது கூடுதலாக 14 ஊர்க்காவல் படை வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு நடந்து வருகிறது. இதற்காக ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடந்தது. இதில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீச்சல் போட்டி தேர்வு நேற்று கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடந்தது.
இதற்கு விழுப்புரம் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ் தலைமை தாங்கினார். கடலூர், விழுப்புரம் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு, நீச்சல் அடித்து தங்களின் திறமையை நிரூபித்தனர். அதில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு நேர்முக தேர்வு விழுப்புரத்தில் நடக்க உள்ளது. இது பற்றி ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ் கூறுகையில், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருடன் இணைந்து ஊர்க்காவல் படையினர் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு நீச்சல் பயிற்சி அவசியம் தெரிந்து இருக்க வேண்டும் என்று முதல் முறையாக அவர்களுக்கு நீச்சல் போட்டி நடத்தி தேர்வு செய்து உள்ளோம் என்றார்.