விவசாய பயன்பாட்டுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்கசிறப்பு முகாம்களில் மனு கொடுத்து காத்திருக்கும் விவசாயிகள்

விவசாய பயன்பாட்டுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க சிறப்பு முகாம்களில் மனு கொடுத்து 3 மாதங்களாக அனுமதி பெற முடியாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Update: 2023-07-03 18:45 GMT

வண்டல் மண்

கண்மாய்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேனி மாவட்டத்தில் இதற்காக அனுமதி பெற விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வந்தனர். கனிமவளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க சென்றால் கூட அலைக்கழிக்கப்படும் சம்பவம் அதிகரித்தது. இடைத்தரகர்கள் தொல்லையும் இருந்தது.

இதையடுத்து விவசாய பயன்பாட்டுக்கு கண்மாய்களில் இருந்து மண் எடுத்துக் கொள்ளும் அனுமதி பெறுவதற்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற தாலுகா அலுவலகங்களில் கடந்த மார்ச் மாதம் சிறப்பு முகாம்கள் நடந்தன. அதில் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

3 மாதங்களாக காத்திருப்பு

மேலும், மாவட்டத்தில் பொதுப்பணித்துறை -மஞ்சளாறு வடிநிலக் கோட்டம் கட்டுப்பாட்டிலுள்ள 98 கண்மாய்கள், பெரியாறு வைகை உபவடிநிலக் கோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள 28 கண்மாய்கள், பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 2 கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 31 கண்மாய்கள் என மொத்தம் 159 கண்மாய்களில் வண்டல் மண் எடுக்கவும் மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சிறப்பு முகாம்கள் நடத்தியதால் இடைத்தரகர்கள் இடையூறு இன்றி அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருந்தனர். அவ்வாறு காத்திருக்கும் விவசாயிகள் பலரும் விண்ணப்பித்து 3 மாதங்கள் ஆகியும் அனுமதி பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இடைத்தரகர்கள்

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் கூறும்போது, 'விவசாய பயன்பாட்டுக்கு கண்மாய்களில் இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என்ற அரசு உத்தரவு இருந்தும் அதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையில் தான் அனுமதி கொடுக்கப்பட்டது. அவ்வாறு அனுமதி பெற்றவர்களில் பலரும் செங்கல் சூளைகளுக்கு மண்ணை அள்ளிக் கொடுத்துள்ளனர். எனவே நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து விரக்தியில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி, விதிகளை மீறாமல் மண் எடுக்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்