முதல்-அமைச்சர் விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்

முதல்-அமைச்சர் விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்

Update: 2022-05-22 20:52 GMT

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் முதல்-அமைச்சர் விருது பெற அடுத்தமாதம்(ஜூன்) 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி உள்ளார்.

விளையாட்டு வீரர்கள்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுனர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம், பாராட்டு பத்திரம் ஆகியவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படுகிறது. இந்த விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் சாதனை படைத்த விவரங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துபவர் அல்லது நிர்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்), நடுவர், நீதிபதி ஆகியோருக்கும் விருது வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமல் தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

விண்ணப்பிக்க தகுதி

இந்த விருதுகளை பெற தமிழகத்தில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக 2 முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு விளையாடியவர்கள் தகுதி பெறுவர். இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரெயில்வே, போலீஸ், தபால் மற்றும் தொலை தொடர்புத் துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.

2-வது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்படமாட்டாது. விளையாட்டு வீரர்கள் அல்லது வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும். உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பித்தல் வேண்டும்.

இணைய தளத்தில் பதிவிறக்கம்

விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலை சிறந்த விளையாட்டு வீரர்கள், பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் பதக்கமும், உலகக்கோப்பை, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனி நபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின்படி, 2021-2022 ஆம் ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகளான 1-4-2018 முதல் 31-3-2021 முடிய பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும். இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்தில் (www.sdat.tn.govin) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தன் முகவரியான விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் "முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் " என்றுஎழுதப்பட்டிருக்க வேண்டும்.

10-ந்தேதி கடைசிநாள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை- 600 003 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (ஜூன்) 10-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்