பள்ளி மாணவர்களிடம் ஆயுத கலாசாரம் தலைதூக்குவதை தடுக்கவேண்டும்; தமிழக அரசுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் வலியுறுத்தல்

தமிழகத்தில் சாதிய மோதல்களை தடுக்காமல் தொடர்ந்து தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவதால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன என்று மத்திய மந்திரி எல்.முருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Update: 2023-11-22 00:38 GMT

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நீதிமன்றம் அருகே கடை ஒன்றின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடந்துள்ளதும், இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட சிறுவன் பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவர் என்ற ஆரம்பக்கட்ட தகவல் வேதனையை அளிக்கிறது.

நாங்குநேரியில் அண்மையில் வீடு புகுந்து பள்ளி மாணவரும், அவரது தங்கையும் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சாதி வன்மமும், ஆயுத கலாசாரமும் மாணவர்களிடம் தலைதூக்குவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என நான் உள்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை வைத்தோம்.

நாங்குநேரி பகுதியில் தொடர்ந்து சாதிய வன்மம் தலைதூக்கி வரும் நிலையில் அதனை ஆளும் தி.மு.க. அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது.

பள்ளிப்பருவத்திலேயே சாதி வன்மமும், ஆயுதங்களை கையாளும் குணமும் பள்ளி மாணவர்களிடையே தலைதூக்கி உள்ளதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல தரப்பில் இருந்தும் தொடர்ச்சியாக குரல்கள் எழுந்து வருகின்றன. ஆனால், தமிழகத்தில் சாதிய மோதல்களை தடுக்காமல் தொடர்ந்து தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவதால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

குற்றவாளிகளை கண்டறியவும், இதுபோன்ற ஆயுத கலாசாரத்தை ஒழித்துக்கட்டவும், தமிழக காவல்துறையும், அந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்