தூத்துக்குடியில், வெள்ளப்பாதிப்பை தடுக்க உப்பாற்று ஓடை சீரமைப்பு பணி தொடக்கம்

தூத்துக்குடியில், வெள்ளப்பாதிப்பை தடுக்க உப்பாற்று ஓடை சீரமைப்பு பணியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-03 18:45 GMT

தூத்துக்குடியில் வெள்ளப்பாதிப்பை தடுக்க ரூ.12 கோடியே 50 லட்சம் செலவில் உப்பாற்று ஓடை சீரமைப்பு பணியை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.

பூமி பூஜை

தூத்துக்குடி அருகே உள்ள வீரநாயக்கன்தட்டு பகுதியில் ரூ.12 கோடியே 50 லட்சம் செலவில் கோரம்பள்ளம் உப்பாற்று ஓடையை சீரமைத்தல் மற்றும் புதிய திருப்பு கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறும் போது, கோரம்பள்ளம் ஆறு, உப்பார் ஓடை என்னும் பெயரில் கடம்பூர் அருகே மலைப்பட்டி என்னும் கிராமத்தில் சிறு, சிறு காட்டோடைகள் இணைந்து ஆறாக உருவெடுத்து ஓட்டப்பிடாரம், தட்டப்பாறை வழியாக தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே சுமார் 32 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கோரம்பள்ளம் குளத்தில் வந்தடைகிறது. பின்பு கோரம்பள்ளம் குளம் மறுகால் 24 கண் மதகு வழியாக உப்பாத்து ஓடை என்னும் பெயரில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி துறைமுகம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு உப்பார் ஓடை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் திடீரென அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டது. திடீர் வெள்ளம் காரணமாக கோரம்பள்ளம் குளம் அதிகபட்ச நீர்மட்டத்தை எட்டியதால் உபரிநீர் போக்கியில் உள்ள 24 மதகுகள் மூலம் 30 ஆயிரம் கனஅடிநீர் திறக்கப்பட்டு உள்ளது. திடீர் நீர்வரத்து காரணமாக கோரம்பள்ளம் குளம் உபரிநீர் போக்கியில் (உப்பாத்துஓடை) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டன. அனைத்து உடைப்புகளும் போர்க்கால அடிப்படையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. இது போன்ற பாதிப்புகள் வராமல் தடுப்பதற்காக சமுதாய பொறுப்பு நிதியின் மூலம் ரூ.5 கோடி செலவில் கோரம்பள்ளம் குளம் உபரிநீர் போக்கியில் (உப்பாற்று ஓடை) உள்ள சிறுபாலங்கள், உள்வாங்கிகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெள்ளப்பாதிப்பு தடுக்கப்படும்

இந்த நிலையில் கோரம்பள்ளம் குளம் உபரிநீர் போக்கியில் (உப்பாற்று ஓடை) இருபுறத்தில் உள்ள கரைகளை பலப்படுத்துதல், வெள்ளத் தடுப்புச்சுவர் அமைத்தல், மலைப்பட்டி கிராமத்தில் புதிய திருப்புக்கால்வாய் வெட்டும் பணி, ஆரைக்குளம் அணைக்கட்டு 1 மற்றும் ஓட்டப்பிடாரம் பெரிய கண்மாய்க்கு செல்லும் வரத்துக் கால்வாயை புனரமைத்தல் ஆகிய பணிகள் ரூ.12 கோடியே 50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் நிறைவடையும் போது, உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும். உப்பாற்று ஓடையின் இருபுறமும் உள்ள 2 ஆயிரத்து 200 ஏக்கர் விவசாயநிலங்கள் மற்றும் உப்பளங்கள் பாதுகாக்கப்படும்.சுமார் 10 கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மண்டலம் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கப்படும். நகரை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பதற்காக அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை தவிர்க்கப்படும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆ.வசந்தி, தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்