புகார் அளிக்க சென்ற கள்ளக்காதலியை மிரட்டுவதற்காக போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்த வாலிபர் கடலூரில் பரபரப்பு
கடலூரில் புகார் அளிக்க சென்ற கள்ளக்காதலியை மிரட்டுவதற்காக போலீஸ் நிலையம் முன்பு வாலிபா் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலம் கந்தன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவருக்கும் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 25 வயதுடைய பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு அந்த வாலிபர், தனது மனைவியின் சொந்த ஊருக்கு அடிக்கடி சென்று வந்த போது, அவரது அக்காவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அந்த வாலிபர், கடந்த சில மாதங்களாக மனைவியை பிரிந்து தனது கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தனது தங்கையின் வாழ்க்கை தன்னால் பறிபோய்விட்டதை நினைத்த அந்த பெண், வாலிபரை விட்டு விலக தொடங்கினார். இருப்பினும் அந்த வாலிபர், தனது கள்ளக்காதலிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.
இதனால் அந்த பெண், நேற்று வாலிபர் மீது புகார் அளிப்பதற்காக கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர், புகார் அளித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அந்த பெண்ணை மிரட்டினார். இருப்பினும் அந்த பெண் புகார் அளிக்க போலீஸ் நிலையம் அருகில் சென்றதும், அந்த வாலிபர் தான் கையில் வைத்திருந்த விஷத்தை குடித்து விட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் புகார் அளிக்காமல், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் அளிக்க சென்ற கள்ளக்காதலியை மிரட்டுவதற்காக வாலிபர் விஷம் குடித்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.