பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க: காரைக்குடியில் இருந்து எர்ணாகுளத்துக்கு சபரிமலை சிறப்பு ரெயில்

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரெயில்வே சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2023-11-28 00:26 GMT

மதுரை,

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரெயில்வே சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க தென்மாவட்ட ரெயில் பயணிகள் நலச்சங்கங்களின் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முதன்முறையாக காரைக்குடியில் இருந்து விருதுநகர், ராஜபாளையம் வழியாக எர்ணாகுளத்துக்கு சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, இந்த சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் வருகிற 30-ந் தேதி, அடுத்த மாதம் 7, 14, 21, 28-ந் தேதி வியாழக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இதில், எர்ணாகுளம்-காரைக்குடி சிறப்பு ரெயில் (வ.எண்.06019) மேற்கண்ட நாட்களில் எர்ணாகுளத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.27 மணிக்கு தென்காசிக்கும் மாலை 3.43 மணிக்கு விருதுநகர் ரெயில் நிலையமும் வந்தடைகிறது. இரவு 7 மணிக்கு காரைக்குடி சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06020) காரைக்குடியில் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.58 மணிக்கு விருதுநகருக்கும், நள்ளிரவு 3.50 மணிக்கு தென்காசிக்கும் செல்கிறது. மறுநாள் நண்பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயிலில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும், திருப்புனித்துறை, வைக்கம் ரோடு, எட்டுமானூர், கோட்டயம், செங்கனச்சரேி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை, காயங்குளம், கொல்லம், குந்த்ரா, கொட்டாரக்கரை, அவனீசுவரம், புனலூர், தென்மலை, ஆரியங்காவு, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு கட்டணம் கூடுதலாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்