புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரிஅரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-26 22:03 GMT

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு வணிக வரித்துறை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயமனோகரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் வழங்க வேண்டிய 3 சதவீதம் அகவிலைப்படி போன்றவற்றை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்குபவர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். நிரந்தரமான பணியிடங்களை அழிக்கும் வகையிலான 115, 139, 152 ஆகிய அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அரசு அலுவலகங்கள்

இதேபோல் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஐ.டி.ஐ., வேலை வாய்ப்பு அலுவலகம், கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத்துறை அலுவலகம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம், பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம், வேளாண்மைத்துறை அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்