நாகலாபுரம் அருகேவீடுபுகுந்து இளம்பெண்ணிடம் 3½ பவுன் சங்கிலி பறிப்பு
நாகலாபுரம் அருகேவீடுபுகுந்து இளம்பெண்ணிடம் 3½ பவுன் சங்கிலி பறித்து சென்ற இரண்டு முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
எட்டயபுரம்:
நாகலாபுரம் அருகே வீடு புகுந்து கத்தி முனையில் இளம்பெண்ணிடம் 3½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
இளம்பெண்
விளாத்திகுளம் அடுத்துள்ள நாகலாபுரம் அருகே கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி (வயது 29). இவர் மகன் ரித்தீஷ் (7), ஒன்றரை வயது மகள் சாதனா ஆகியோருடன் கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் ராமலட்சுமி தூங்கச் சென்றார். நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் சத்தம் கேட்டு ராமலட்சுமி விழித்தபோது, முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் பீரோவை உடைக்க முயற்சித்து கொண்டிருந்தனர்.
கத்திமுனையில் நகைபறிப்பு
ராமலட்சுமியை பார்த்தவுடன் அவர்கள், கத்தியை காண்பித்து மிரட்டி, அவர் அணிந்திருந்த 3½ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதில் அதிர்ச்சி அடைந்த ராமலட்சுமி போட்ட கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த 2 கொள்ளையர்களும் இருளில் ஓடி தப்பி சென்று விட்டனர்
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரலிங்கபுரம் போலீசார் சம்பவ வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர்.
முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 முகமூடி கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
நாகலாபுரத்தில் வீடுபுகுந்து இளம்பெண்ணிடம் கத்தி முனையில் நகையை முகமூடி கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.