டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரை - கவர்னர் நிராகரிப்பு

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரையை கவர்னர் நிராகரித்துள்ளார்.

Update: 2023-10-23 07:47 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் 9-ந்தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக இருக்கும் முனியநாதன் பொறுப்பு தலைவராக தற்போது வரை இருந்து வருகிறார்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாததால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள், தேர்வு முடிவுகள் போன்றவற்றை அறிவிப்பது, வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனை சரிசெய்ய டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை தேர்வு செய்து, பரிந்துரை கடிதத்தை கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை பெறுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைத்தது.

இந்த நிலையில், கவர்னர் மாளிகையில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. தலைவரை தேர்வு செய்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டதா?, தலைவர் தேர்வு எந்த முறையில் நடத்தப்பட்டது?, அதேபோல் உறுப்பினர்கள் தேர்வில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன? என்பன போன்ற பல்வேறு விளக்கங்களை கேட்டு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டிருந்த கேள்விகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் முறையான விளக்கக் கடிதம் அளிக்கப்பட்டது. இதில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு எதனை பின்பற்றி நடத்தப்பட்டது?, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல் எப்படி பின்பற்றப்பட்டு இருக்கிறது? தலைவர் பதவிக்கு யார்? யாரெல்லாம்? விண்ணப்பித்தார்கள்? என்பன உள்பட பல்வேறு தகவல்களை விளக்கத்துடன் அரசு தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் சைலேந்திர பாபு நியமனத்தை கவர்னர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார். மேலும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி, வேறு ஒருவரை தேர்வு செய்ய கவர்னர் பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்