திருப்பூர் குமரன், சுப்ரமணிய சிவா பிறந்த தினம் - கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

சுதந்திர போராட்ட தியாகிகள் சுப்ரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் ஆகியோரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்என் ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2022-10-04 11:15 GMT

சென்னை,

கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சுதந்திரப் போராட்ட தியாகி சுப்ரமணிய சிவாவின் நினைவு நாள் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகி திருப்பூர் குமரனின் பிறந்தநாள் ஆகியவற்றை ஒட்டி ஆளுநர் மாளிகையில் இன்று (04.10.2022) அவர்களின் திருவுருவப் படங்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்டத்தில் சுப்ரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் ஆகியோரின் தேசப்பற்று மற்றும் மகத்தான தியாகங்கள் குறித்து கவரனர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார். சுப்ரமணிய சிவா தனது வாழ்நாள் முழுவதையும் தேசத்திற்காக அர்ப்பணித்தவர்.

காவலர்களின் தடி அடி, துப்பாக்கிச் சூடு ஆகியவற்றுக்கு அஞ்சாமல் இறுதி மூச்சு வரை "வந்தே மாதரம்" என முழங்கி மூவர்ணக் கொடியை தன் கையோடு வைத்திருந்த இளம் சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் என தெரிவித்தார்.

இருவரும் ஆங்கிலேயர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட போதிலும், தாய்த்திருநாட்டிற்கு தவப்புதல்வர்களாக திகழ்ந்தார்கள் என்றும், அவர்களின் ஈடு இணையற்ற பங்களிப்புக்கு நம் இந்திய தேசம் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என்றும், அவர்களின் வாழ்க்கை வரும் தலைமுறைகளுக்கு உத்வேகமாக இருக்கும் என்றும் கவர்னர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கவர்னரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த்ராவ் வி பாட்டில், கவர்னர் மாளிகை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரு பெரும் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்