திருப்பூர்: பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கார் கவிழ்ந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக பழனியில் இருந்து கேரளா நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பாலப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கார் வந்தபோது அங்கிருந்த வேகத்தடை மீது கார் வேகமாக ஏறியது. இதையடுத்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த மோகன்ராஜ் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜகோபால், ரங்கசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.