திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு 10 மணி நேரம் இடைவிடாது பாலாபிஷேகம்

வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு குடம், குடமாக இடைவிடாமல் 10 மணி நேரம் பாலாபிஷேகம் நடந்தது. அரோகரா கோஷங்களுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-02 19:50 GMT

திருப்பரங்குன்றம்,

வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு குடம், குடமாக இடைவிடாமல் 10 மணி நேரம் பாலாபிஷேகம் நடந்தது. அரோகரா கோஷங்களுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

காப்பு கட்டுதல்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்றாகும்.

இந்த திருவிழா 10 நாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

வைகாசி விசாகமான நேற்று விழாவின் சிகர நாள் ஆகும். இதையொட்டி அதிகாலை 5 மணி அளவில் சண்முகர் சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க அங்கிருந்து சண்முகப் பெருமான் புறப்பட்டு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார். பாலாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.

குடம், குடமாக பாலாபிஷேகம்

இதனையடுத்து அதிகாலை 5.45 மணியில் இருந்து பக்தர்கள் ்நேர்த்திக்கடனாக கொண்டு வந்த பால் கொண்டு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடந்தது. இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

இதனையொட்டி மதுரை, திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து கூட்டம், கூட்டமாக, சாரை, சாரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து கோவிலில் குவிந்தனர்.

பன்னீர் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி, மற்றும் பறவை காவடி என விதவிதமான காவடிகளுடன் வந்தும், 10 அடி, 15 அடி, 25 அடி நீளமுள்ள அலகு குத்தி வந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.. அப்போது பக்தர்கள் எழும்பிய அரோகரா கோஷம் மலையில் எதிரொலித்தது.

பால்குடத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் 16 கால் மண்டபம் அருகே அக்னி வார்த்து பூக்குழி தயாராக இருந்தது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள வெயிலு உகந்த அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பூக்குழி இறங்கினார்கள். பின்னர் அவர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் சென்று பாலாபிஷேகம் செய்து சண்முகப் பெருமானை வழிபட்டனர்.

10 மணிநேரம் பாலாபிஷேகம்

திருப்பரங்குன்றம் கோவிலைப் பொறுத்தவரை மலையை குடைந்து கருவறை அமைந்து இருப்பதால் இங்கு விக்ரங்களுக்கு அபிஷேகம் இல்லை. அதேசமயம் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி செவ்வாய்க்கிழமை தோறும் பெரும்பாலான பக்தர்கள் வேலுக்கு பாலாபிஷேகம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்திருவிழா நாளில் சண்முகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெறுவது தனி சிறப்பாகும்.

விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை 5.45 மணியில் இருந்து மதியம் 3.45 வரை இடைவிடாது 10 மணிநேரம் சண்முக பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 2 மணிநேரம் பாலாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்