திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் புதிய வழித்தடம் அமைக்கும் பணி தீவிரம்

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் போக்குவரத்துக்கு புதிய வழித்தடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-08-14 00:31 GMT

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் போக்குவரத்துக்கு புதிய வழித்தடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தென்கால் கண்மாய்

திருப்பரங்குன்றத்தில் உள்ள ஏராளமான விவசாயிகளின் முதுகெலும்பாக தென்கால் கண்மாய் அமைந்துள்ளது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களுக்கான நீர் ஆதாரமாகவும், திருப்பரங்குன்றம் மக்களின் குடிநீரின் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் தென்கால் கண்மாய் உள்ளது. தென்கால் கண்மாயை தூர்வாரி ஆழப்படுத்துவதோடு தண்ணீர் நிரப்பபட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறை அலகின் கீழ் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் வாகன போக்குவரத்திற்காக புதிய வழித்தடம் அமைப்பதற்கு ரூ.41.89 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒருவழிப்பாதை

இதனையொட்டி பசுமலை மூலக்கரை அருகில் இருந்து திருப்பரங்குன்றம் பை-பாஸ் ரோடு சந்திப்பு வரை 1.2 கி.மீ. தூரம் 7 மீட்டர் அகலத்திற்கு தென்கால் கண்மாயில் போக்குவரத்திற்காக புதிய வழித்தடம் அமைக்கப்படுகிறது. கண்மாய் கரையில் பக்கவாட்டின் ஒருபுறம் 3 மீட்டர் அகலத்திற்கு பொதுமக்கள் வசதிக்காக நடைபாதையும், மற்றொருபுறம் 3 மீட்டர் அகலத்திற்கு நிழல் தரும் மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி கரையின் பக்கவாட்டில் கான்கிரீட்டிலான தடுப்பு சுவர் கட்டுவதற்காக கண்மாயின் உள்பகுதியில் 5 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கண்மாயின் உள்வாயில் அள்ள கூடிய மண்ணால் கரையை பலப்படுத்தி அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கண்மாய் கரையில் உருவாக கூடிய புதியசாலையும், தற்போது திருப்பரங்குன்றம் பகுதி செல்லக்கூடிய சாலையும் ஒருவழிப்பாதையாக அமையும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்