சரியான நேரத்தில் நீதி என்பது ஒவ்வொருவரின் உரிமை:பல வருடங்களாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை தீவிரமாக ஆராய வேண்டும்

பல வருடங்களாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை தீவிரமாக ஆராய வேண்டும் என்றும், பதில்மனு தாக்கல் செய்யாத கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதித்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-23 20:32 GMT


பல வருடங்களாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை தீவிரமாக ஆராய வேண்டும் என்றும், பதில்மனு தாக்கல் செய்யாத கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதித்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பதில் மனு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஓய்வூதியர் ஒருவர், தனது பணிக்காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்தில் சேர்க்க வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில், 7½ ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது, அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கக்கோரி வருவாய்த்துறை செயலாளர், மதுரை மாவட்ட கலெக்டர், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., மற்றும் திருமங்கலம் தாசில்தார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, சென்னை ஐகோர்ட்டு ரிட் மனுக்கள் விதிகளில், வழக்கு தொடர்பாக நோட்டீசு அனுப்பிய 8 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு மேல் அவகாசம் தேவைப்படும் எனில், ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிகள் அனைவருக்கும் பொதுவானது.

விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்ற அரசியலமைப்பு சட்டத்தின் அங்கமாக இந்த விதிகள் உள்ளன. ஆனால், மேற்கண்ட வழக்கில் கடந்த 7½ ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவிலும் உசிலம்பட்டி, திருமங்கலம் ஆர்.டி.ஓ. அலுவலகம் பிரிப்பு தவிர ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு காரணம் எதுவும் இல்லை. ஒரு சில ரிட் மனுக்கள் 15 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. இதனால் வழக்குகள் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ளன.

ரூ.10 ஆயிரம் அபராதம்

ஒவ்வொரு குடிமகனுக்கும் சரியான நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும். இது தனிநபர் உரிமையாகும். இது போன்று பல வருடங்களாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டும். ஏனெனில் வழக்கு தொடர்ந்தவர்களின் வாழ்க்கையில் இந்த காலதாமதம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். எனவே பதில் மனு தாக்கல் செய்ய காலக்கெடு விதிக்க வேண்டும். காலதாமதத்தை அனுமதிக்க முடியாது.

இந்த வழக்கில் காலதாமதம் ஏற்படுத்திய அதிகாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த பணம் கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்கப்பட வேண்டும். பதில் மனு தாக்கல் செய்வதில் சென்னை ஐகோர்ட்டின் ரிட் விதிகளை பின்பற்ற தலைமை செயலாளர், அரசு தலைமை வக்கீல், மத்திய அரசின் கூடுதல் மற்றும் துணை சொலிசிட்டர் ஜெனரலுக்கு இந்த வழக்கின் உத்தரவு நகலை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்