மாமியார்-மருமகளை கட்டிப்போட்டு 65 பவுன் நகை கொள்ளை

தூத்துக்குடி வியாபாரி வீட்டில் மாமியார்-மருமகளை கட்டிப்போட்டு 65 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-10-05 00:30 IST

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி முத்தையாபுரம் தவசிபெருமாள் சாலை அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ் என்ற குட்டி (வயது 65). இவர் தூத்துக்குடி ஸ்பிக்நகர் பஜாரில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி (54).

இவர்களுக்கு தங்கதுரை (38), ஜான் செல்வசீனி (35) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தங்கதுரைக்கு திருமணமாகி, மனைவி அஸ்வினி (35), மகன் ஜஸ்வந்த் (5) ஆகியோருடன் சென்னையில் வசித்தார். ஜான் செல்வசீனி திருமணமாகி குடும்பத்துடன் தஞ்சாவூரில் உள்ளார்.

கதவை திறந்து வைத்து டி.வி. பார்த்தபோது...

கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கதுரை தனது மனைவி, மகனுடன் சொந்த ஊரான தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு வந்தார். பின்னர் தங்கதுரை மட்டும் மீண்டும் சென்னைக்கு சென்று விட்டார். இதனால் மாமனாரின் வீட்டில் அஸ்வினி, மகன் ஜஸ்வந்துடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலையில் அற்புதராஜ் வழக்கம்போல் தனது பேன்சி கடைக்கு சென்று விட்டார். இரவு 7 மணியளவில் வீட்டில் செல்வராணி, மருமகள் அஸ்வினி ஆகியோர் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். வீட்டின் வாசல் அருகில் பேரன் ஜஸ்வந்த் விளையாடிக் கொண்டிருந்தான். எனவே கதவை திறந்து வைத்திருந்தனர்.

65 பவுன் நகை கொள்ளை

அப்போது பர்தா உடை அணிந்த 2 மர்மநபர்கள் திடீரென்று செல்வராணியின் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் கத்தியை எடுத்து செல்வராணி, அஸ்வினி ஆகியோரின் கழுத்தில் வைத்துக்கொண்டு நகைகளை கழட்டி தருமாறு மிரட்டினர். பயத்தில் அவர்கள் நகைகளை கழட்டி கொடுத்தனர்.

பின்னர் செல்வராணி, அஸ்வினி, சிறுவன் ஜஸ்வந்த் ஆகிய 3 பேரையும் நாற்காலியில் அமர வைத்து, அவர்களின் வாயில் துணி வைத்தும், கைகளை துப்பட்டாவாலும் கட்டிப் போட்டனர். தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவையும் திறந்து, அதில் இருந்த தங்க நகைகளை திருடினர். மொத்தம் சுமார் 65 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே, நீண்ட நேரம் போராடிய செல்வராணி, அஸ்வினி ஆகியோர் தங்களது கட்டுகளை நைசாக அவிழ்த்தனர். தொடர்ந்து ஜஸ்வந்தின் கட்டுகளையும் அவிழ்த்து, இதுகுறித்து அற்புதராஜிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர், கொள்ளை சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மூக்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள்

கொள்ளை நடந்த இடத்தில் போலீசாரின் மோப்பநாய் 'கோக்கோ' மோப்பம் பிடித்து விட்டு, அங்குள்ள மெயின் ரோடு வரையிலும் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்தனர். அப்போது செல்வராணியின் வீட்டில் கொள்ளையடித்த 2 மர்மநபர்களும் ஸ்பிக்நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற பஸ்சில் ஏறி தப்பி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து மாமியார்-மருமகளை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்