தமிழக வனப்பகுதி வழியாக மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு சாலை அமைக்க நில அளவீடு பணிகள் நிறைவு; கலெக்டர் தகவல்

தமிழக வனப்பகுதி வழியாக மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு சாலை அமைக்க நில அளவீடு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-07-29 15:53 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் பேசிய விவசாயி ஒருவர், "தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக சாலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த பணி எந்த நிலையில் உள்ளது?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கலெக்டர், "இது மக்களின் நீண்டகால கோரிக்கை. தமிழக வனப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் நடத்தப்பட்டது. அந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் அடுத்தகட்ட பணிகள் நடக்கும்" என்றார்.

400 ஏக்கர் ஆக்கிரமிப்பு

மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-

கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்படும் ஓடைகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் சந்திக்கும் நடைமுறை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பி.டி.ஆர்., தந்தை பெரியார் வாய்க்கால் பாசன பகுதிகளில் இருபோக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சளாறு பகுதியில் சுமார் 400 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்து பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை மாவட்ட கலெக்டர் நேரடி விசாரணை நடத்தி அரசு நிலங்களை மீட்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சமர்ந்தா, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) அனுசியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்