சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்..!

Update: 2022-10-07 10:32 GMT

திருத்தணி:

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு சொந்தமான பேருந்து திருத்தணி அடுத்த அருங்குளம் கூட்டுச் சாலையில் பணியாளர்களை ஏற்றிக் கொண்டு சுங்குவார் சத்திரத்தை நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை கோவிந்தராஜ் (வயது 40) என்பவர் ஓட்டினார்.

அந்த பேருந்து இன்று காலை 11 மணியளவில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அருங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பேருந்துக்கு முன்னால் டிராக்டர் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சடைந்த பேருந்தின் டிரைவர் கோவிந்தராஜ் பிரேக் அடித்து உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.

அந்த சமயத்தில் பின்னால் வந்த கார் பேருந்து மீது மோதியது. விபத்துக்குள்ளான கார் மீது சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதியை நோக்கி வந்த தடம் எண் 201 அரசு பேருந்து மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் வந்த ஆந்திர மாநிலம், மேல் திருப்பதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரசாத் (வயது 35), அவரது தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகிய 5 பேர், அரசு பேருந்தில் பயணம் செய்த 37 பயணிகள், தனியார் தொழிற்சாலை பேருந்தில் இருந்த 8 பேர் என அதிர்ஷ்டவசமாக 50 பேர் காயமின்றி உயிர்தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் சிக்கிய வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து அரக்கோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக் கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்