பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகத்திருநாளான பக்ரீத் பண்டிகையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்து தியாகத்திருநாளை சிறப்பாக கொண்டாடினர்.

Update: 2023-06-29 18:45 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகத்திருநாளான பக்ரீத் பண்டிகையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்து தியாகத்திருநாளை சிறப்பாக கொண்டாடினர்.

பக்ரீத் பண்டிகை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகத்திருநாள் என்னும் பக்ரீத் ஹஜ்பெருநாளை முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடினர். ஆதிநபி இப்ராகிம் இறைவனின் கட்டளைப்படி அவரது மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக அறுத்து பலிகொடுக்க முன்வந்தார். அவரின் தியாகத்தை ஏற்றுக்கொண்ட இறைவன் ஆதிநபியின் மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டினை அறுத்து பலியிட்டு அதன் இறைச்சியை உறவினர்கள் மற்றும் ஏழைகளுக்கு வழங்குமாறு கட்டளையிட்டார்.

இறைவனின் கட்டளைப்படி மகனை பலிகொடுக்க முன்வந்த ஆதிநபி இப்ராகிமின் இந்த தியாகத்தினை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் தியாகத்திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருவதுடன் ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்து அதன் இறைச்சியை தனக்கு ஒரு பங்கு எடுத்துக்கொண்டு மீதி 2 பங்கை உறவினர்கள் மற்றும் ஏழைகளுக்கு வழங்கி வருகின்றனர்.

முஸ்லிம்கள் பங்கேற்பு

மேலும், ஹஜ் பெருநாளையொட்டி நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு மெக்கா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு ஹாஜிகளாக திரும்பி வருவர். பக்ரீத் பண்டிகையையொட்டி ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் அருகில் உள்ள பொது இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ராமநாதபுரம் நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

தொழுகையின் முடிவில் உலக அமைதிக்காகவும், மழைபெய்து விவசாயம் செழிக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகையையொட்டி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் புத்தாடை அணிந்து வந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ஈதுல் அல்ஹா என்று தங்களின் தியாகத்திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

குர்பானி கொடுத்தனர்

இதேபோல ராமநாதபுரம் வெளிப்பட்டினம் மற்றும் பாரதிநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களிலும், திறந்தவெளி மைதானங்களிலும் என மொத்தம் 276 இடங்களில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

பெண்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். சிறப்பு தொழுகையின் முடிவில் மாவட்டம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து இறைவனின் கட்டளைப்படி ஏழை எளியவர்களுக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு இறைச்சியை ஒவ்வொரு பங்காக குர்பானி கொடுத்ததோடு, ஒரு பங்கினை தாங்களும் சமைத்து சாப்பிட்டு தியாகத்திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்ற பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கீழக்கரை

கீழக்கரையில் 8 ஜமாத்திலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கீழக்கரை தெற்கு தெரு பரிபாலன கமிட்டி ஜும்மா பள்ளிவாசல் தலைவர் உமர் அப்துல் காதர் களஞ்சியம் தலைமையில் துணைத் தலைவர் புவுசுர் ரஹ்மான் முன்னிலையில் கிஷ்கிந்தா திடலில் சபியுல்லா ஆலிம் தொழுகை நடத்தினார். மேலத் தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் யூசுப் சாஹிப் தலைமையில் மன்சூர் அலிநூரி ஆலிம் முன்னிலையிலும் கிழக்குத்தெரு ஜமாஅத் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சேகு அபூபக்கர் சாஹிப் தலைமையில் சம்சுதீன் ஆலிம் முன்னிலையிலும் நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசலில் தலைவர் கியாதுதீன் தலைமையில் காதர் பக்ஸ் ஹுஸைன் சித்தீகி முன்னிலையிலும் பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர் அபுதாஹிர் தலைமையில் அபூபக்கர் சித்திக் மவுலவி முன்னிலையிலும், மின்ஹாஜியார் பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் ரசூல் நிஸ்தார் மஸ்லஹி ஆலிம் முன்னிலையிலும் கடற்கரை பள்ளியில் ஆபிஸ் ரஹூப் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.தெற்கு தெரு இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் அனைவருக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். அதேபோல் ஏர்வாடி தர்காவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிறப்பு தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்