ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர்

விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி பொங்கல் விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர்.

Update: 2022-06-08 20:35 GMT

விருதுநகர், 

விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி பொங்கல் விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர்.

வைகாசி பொங்கல்

விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அம்மன் மகமை மண்டபத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் பொங்கல் திருவிழா நடந்ததை ஒட்டி பக்தர்கள் பொங்கலிட்டு தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று அக்னிச்சட்டி எடுக்கும் வைபவம் நடந்தது. அதிகாலையிலிருந்தே ஆண்களும், பெண்களும் மஞ்சள் ஆடை உடுத்தி அக்னிசட்டி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலில் தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.

நேர்த்திக்கடன்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூரிலிருந்து வந்து அக்னிசட்டி எடுத்து தங்கள் பிரார்த்தனை செலுத்தினர். குழந்தைகளை கரும்புத்தொட்டிலில் இட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தம்பதியினர் தங்கள் பிரார்த்தனையை செலுத்தினர்.

பக்தர்கள் பலர் கயிறு குத்தி ரதம் இழுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று ரதோற்சவம் நடைபெற உள்ளது. பராசக்தி வெயிலுகந்தம்மனும், மாரியம்மனும் சித்திர ரதத்தில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்தனர். போக்குவரத்து கழகத்தினர் கிராமப்புறங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்