ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை விரைந்து தண்டிக்க வேண்டும் - ஜெ.தீபா

நேர்மையான அதிகாரி மூலம் விசாரணை நடத்தி, ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை விரைந்து தண்டிக்க வேண்டும் என்று ஜெ.தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-10-21 22:40 GMT

சசிகலா மீது குற்றச்சாட்டு

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர் சிவக்குமார் ஆகியோர் மீது சரமாரியாக குற்றம்சாட்டியது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா அளித்த பேட்டி வருமாறு:-

எம்.ஜி.ஆர். மரணமடைந்த நேரத்தில் இவ்வளவு தகவல் தொழில்நுட்ப வசதி கிடையாது. இருப்பினும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன, எந்த நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது போன்ற விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்தனர். வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

சசிகலா ஆசைப்பட்டார்

இதுபோன்று சசிகலாவும், அவரால் கோடி கோடியாக சம்பாதித்த அ.தி.மு.க. தலைவர்களும் ஏன் ஜெயலலிதாவை காப்பாற்ற முன்வரவில்லை? ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை மூடி மறைக்கவேண்டிய அவசியம் என்ன?

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அப்போதைய ஆட்சியாளர்களுக்கும், உடன் இருந்த சசிகலாவுக்கும் உண்டு.

எனது அத்தை உயிரிழப்பதற்கு அவரைச் சுற்றி இருந்தவர்களே காரணமாக இருந்துள்ளனர். ஜெயலலிதாவிடம் அளித்த உறுதிமொழியை மீறி அவரது இருக்கையில் அமர்வதற்கு சசிகலா ஆசைப்பட்டார்.

தண்டிக்கப்பட வேண்டும்

அதன் காரணமாகவே ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டாகும். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், தவறு செய்த அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

சசிகலாவுக்கு தற்போதைய போலீஸ் அதிகாரிகள் பலரும் நெருக்கமானவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது.

மர்மங்களை வெளிக்கொண்டுவர...

அதை தமிழக அரசு கவனத்தில்கொண்டு, நேர்மையான போலீஸ் அதிகாரியை நியமித்து அடுத்தகட்ட விசாரணையை நடத்த வேண்டும். எனது அத்தை மரணத்தில் உள்ள மர்மங்களை தமிழக அரசு வெளிக்கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் அப்போது இருந்த ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கடமை தவறி இருப்பது உறுதியாகி இருக்கிறது. அத்தையின் மரணத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும்.

ஏன் பார்க்கவிடவில்லை?

தற்போது சசிகலா தவறு செய்யவில்லை என்று கூறுகிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஏன் எங்களை எல்லாம் பார்க்கவிடவில்லை? அதற்கு சசிகலாவும் அவருடன் இருந்தவர்களுமே காரணம்.

எனவே, எனது அத்தை மரணத்துக்கு பதில்சொல்ல வேண்டிய முழுப் பொறுப்பு சசிகலாவுக்கு உள்ளது. அ.தி.மு.க.வில் தற்போது நடைபெற்றுவருவது மிகப்பெரிய நாடகமாகும். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நாடகமாடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்