தூத்துக்குடி பனிமயமாதா ஆலய தங்கத்தேர் பவனி

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய தங்கத்தேர் பவனி நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-08-05 18:45 GMT

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

441-வது ஆண்டு பெருவிழா 

இந்த ஆண்டு 441-வது ஆண்டு பெருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 4.30 மணிக்கு ஜெபமாலை, 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு இரண்டாம் திருப்பலி, பகல் 12 மணிக்கு ஜெபமாலை, மாலை 3 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, இரவு 7.15 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்து வந்தது. மேலும் இளையோர், முதியோர், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், கப்பல் மாலுமிகள், உப்பு தொழிலாளர்கள், பனை தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலிகள் நடந்தன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிஷப் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர். நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும் நடந்தது.

தங்கத்தேர் பவனி

பனிமயமாதா ஆலயத்தில் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-வது தங்கத்தேர் பவனி நேற்று காலை ேகாலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலையில் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த தேர்க்கூடம் திறக்கப்பட்டது. அப்போது தங்கத்தேர் மின்னொளியால் ஜொலித்தது. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து காலை 5.15 மணிக்கு தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும், காலை 7 மணிக்கு கோவா உயர்மறைமாவட்ட பிஷப் கர்தினால் பிலிப்நேரி தலைமையில் தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடந்தது.

இதைத்தொடர்ந்து கோவை பிஷப் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் பிஷப் இம்மானுவேல் பர்னாண்டோ ஆகியோர் தேருக்கு அர்ச்சிப்பு செய்தனர். பின்னர் காலை 8.10 மணிக்கு தங்கத்தேரில் பனிமயமாதா வீற்றிருக்க, மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 'மரியே வாழ்க, மரியே வாழ்க' என்று விண்ணதிர கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். 53 அடி உயர தங்கத்தேர் தகதகவென ஜொலிப்புடன் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. செயிண்ட் பீட்டர் கோவில் தெரு, பெரியகடை தெரு, கிரேட்காட்டன் ரோடு, பீச் ரோடு வழியாக தேர் பவனி வந்தது. தேர் பவனி சென்ற வீதியின் இருபுறமும் உள்ள வீடுகளின் மாடியில் இருந்தபடி பக்தர்கள் தேர் மீது ஏராளமான பூக்களை தூவி வழிபட்டனர். மதியம் 12 மணி அளவில் தேர் ஆலயம் முன்பு வந்து சேர்ந்தது.

லட்சக்கணக்கான பக்தர்கள்

அனைத்து பகுதிகளிலும் பக்தர்களுக்கு குடிநீர், பால், குளிர்பானம், பழங்கள் வழங்கப்பட்டன. இந்த தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர். நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனை பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டு இருந்தனர்.

மதியம் 12.30 மணிக்கு தங்கத்தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடந்தது. தங்கத்தேர் பொதுமக்கள் பார்வைக்காக அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை ஆலயத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

விழாக்கோலம்

விழாவையொட்டி நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. தூத்துக்குடி நகரில் பெரும்பாலான தெருக்கள், கடைகளில் சீரியல் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டது.

நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் பங்குதந்தை குமார்ராஜா தலைமையில் உதவி பங்குத்தந்தை சைமன் ஆல்டஸ் மற்றும் பேராலய மேய்ப்புப்பணி குழுவினர், பக்தசபையினர், இறைமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்