நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை மழை 224 மில்லி மீட்டர் கூடுதலாக பதிவு- அதிகாரி தகவல்

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 224 மில்லிமீட்டர் கூடுதலாக கோடை மழை பெய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2022-06-01 14:22 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 224 மில்லிமீட்டர் கூடுதலாக கோடை மழை பெய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோடை மழை

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும் அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்யும். இதேபோல் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை தான் அதிக அளவில் பெய்யும். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட கோடை மழையும் பருவமழைக்கு நிகராக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தேயிலை காய்கறி சாகுபடிகள் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும், நீலகிரி மாவட்டம் பசுமைக்கு திரும்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

224 மில்லி மீட்டர் அதிகம்

கோடை மழை அளவு குறித்து இந்திய மண் மற்றும் பாதுகாப்பு நிறுவன முதன்மை விஞ்ஞானியும் தலைவருமான கண்ணன் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 200 மில்லி மீட்டர் மற்றும் வடகிழக்கு பருவமழை சராசரியாக 300 மில்லி மீட்டரும், கோடைமழை 230 மில்லி மீட்டரும் பதிவாகும்.

ஆனால் இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் கூடுதலாக 454 மில்லி மீட்டர் கோடை மழை பெய்துள்ளது. இதன் மூலம் 224 மில்லிமீட்டர் அதிகமாக பதிவாகியுள்ளது. குறிப்பாக மே மாதத்தில் மட்டும் 268 மில்லி மீட்டர் மழை பெய்தது.

7 ஆண்டுகளில் அதிக மழைப்பொழிவு

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கோடை மழையில் கடந்த 7 ஆண்டுகளில் இந்த ஆண்டு தான் அதிக பட்சம் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதாவது கடந்த 7 ஆண்டுகளில் 400 மில்லி மீட்டரை தாண்டவில்லை. இந்த ஆண்டு 454 மில்லிமீட்டர் பெய்துள்ளது. இதேபோல் குறைந்தபட்சமாக 2016-ம் ஆண்டு 170 மில்லி மீட்டர் மட்டும் பதிவாகி இருந்தது. தற்போது கோடை மழை முடிந்து விட்டது. அடுத்த ஒரு சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கன மழை

இதற்கிடையேஊட்டியில் காலை 10 மணி முதல் 12 மணி வரை சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. குறிப்பாக வேலைக்கு சென்று வீடு திரும்பியவர்கள் குடை பிடித்தப்படி சென்றதை காண முடிந்தது.

பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஊட்டி 5, குந்தா 12, அவலாஞ்சி 8, பாலகொலா 34, கேத்தி 51, குன்னூர் 20, சேரங்கோடு 26 என சராசரியாக 7 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்