திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் தேரோட்டம்
திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
தேரோட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் 62-வது தலமாக திகழும் இந்த கோவிலில் 10 நாள் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாள் விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் நித்திய கல்யாண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார். திருவிடந்தையில் முக்கிய மாட வீதிகள் வழியாக சென்ற தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தையொட்டி முன்னதாக வைணவ ஆகம முறைப்படி பஞ்ச கவ்விய அபிஷேக பொருட்களால் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.
நாலாயிர திவ்விய பிரபந்த சாற்றுமுறை
பிரம்மோற்சவ விழாவையொட்டி மாமல்லபுரம் குலசேகரஆழ்வார் ராமானுஜர் மடம் சார்பில் அதன் தலைவர் நெய்குப்பி கிருஷ்ணராமானுஜதாசர் சுவாமி தலைமையில் 80 வயதை கடந்த வைணவ பாகவதர்கள் பங்கேற்று 10 நாட்கள் நாலாயிர திவ்விய பிரபந்த சாற்றுமுறை பாடல் நிகழ்ச்சியை தொடங்கி உள்ளனர். தினமும் 1,000 பாடல்கள் வீதம் பாடி நித்திய கல்யாண பெருமாளை போற்றி இவர்கள் பாடுகின்றனர்.
விழா ஏற்பாடுகளை திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் உற்சவதாரர்கள், திருவிடந்தை ஊர் பஞ்சாயத்தார், கிராம மக்கள் செய்து இருந்தனர்.