தேனி அருகே மரத்தை வெட்டியபோது கிளை விழுந்து திருவள்ளுவர் சிலை சேதம்

தேனி அருகே மரத்தை வெட்டிய போது கிளை விழுந்து திருவள்ளுவர் சிலை, திருக்குறள் பலகை சேதம் அடைந்தது. இதனால், நெடுஞ்சாலைத்துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-30 21:00 GMT

தேனி அருகே மரத்தை வெட்டிய போது கிளை விழுந்து திருவள்ளுவர் சிலை, திருக்குறள் பலகை சேதம் அடைந்தது. இதனால், நெடுஞ்சாலைத்துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளுவர் சிலை

தேனி அருகே நாகலாபுரத்தில், தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றின் காரணமாகவும், திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் கடந்த 1984-ம் ஆண்டு திருவள்ளுவர் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் மன்றம் சார்பில், அதே ஊரில் சாலையோரம் திருவள்ளுவர் சிலையுடன் கூடிய திருக்குறள் பலகை கடந்த 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்த பலகையில் தினம் ஒரு திருக்குறள் அதன் விளக்கத்துடன் எழுதப்பட்டு வந்தது.

23 ஆண்டுகளாக தினமும் இதில் திருக்குறள் எழுதப்பட்டு வந்தது. அதைப் பார்த்து பலரும் திருக்குறள் கற்றுக்கொண்டனர். இந்த ஊரின் அடையாளமாகவே அந்த மக்கள் அதனை கருதினர்.

சுக்குநூறாக நொறுங்கியது

இந்தநிலையில் திருக்குறள் பலகை அருகில் இருந்த ஒரு வேப்ப மரத்தை வெட்டி அகற்றும் பணியில் மாநில நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது மரத்தின் ராட்சத கிளையை வெட்டிய போது அந்த கிளை திருக்குறள் பலகை மீது விழுந்தது. அதில் பலகை சுக்குறூறாக நொறுங்கியது. மேலும், அதில் இருந்த திருவள்ளுவர் சிலையும் உடைந்தது. அதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் பலரும் அங்கு திரண்டனர். திருவள்ளுவர் சிலையுடன் கூடிய குறள் பலகை உடைந்து போனதற்கு பணியாளர்களின் அலட்சியமே காரணம் என்று கூறி கண்டனத்தை தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்களிடம் மீண்டும் அதே இடத்தில் குறள் பலகை மற்றும் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். அப்போது அவர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மீண்டும் சிலை

இதுகுறித்து திருவள்ளுவர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, "இந்த மரத்தால் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டினர். அப்போது குறள் பலகை இருப்பதை மக்கள் சுட்டிக்காட்டினர். ஆனால் பணியாளர்கள் அலட்சியமாக மரத்தை வெட்டியதால் சிலையும், பலகையும் உடைந்து விட்டது. நெடுஞ்சாலைத்துறையினரும், ஊராட்சி நிர்வாகமும் மீண்டும் அதே இடத்தில் திருவள்ளுவர் சிலையுடன் கூடிய குறள் பலகை அமைத்துக்கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். 23 ஆண்டுகளாக கம்பீரமாக இருந்த திருவள்ளுவர் சிலை சேதம் அடைந்தது மக்களிடம் ஒருவித சோகத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்