திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2023-05-02 08:43 GMT

தொன்மை வாய்ந்த கோவில்

திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் 1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்த கோயிலாகும் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய ஸ்தலமாகும் இக்கோவில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகவும் விளங்குகிறது. இத்தலத்தின் மூலவர் மலைமேல் வேதகிரீஸ்வரரும், தாழக்கோயிலில் தாயார் திரிபுரசுந்தரி அம்மனும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

இத்தலம் வேதமே, மலையாய் இருப்பதினால் 'வேதகிரி' எனப் பெயர் பெற்றது. இம்மலையில் நாள்தோறும் உச்சிப்பொழுதில் 2 கழுகு வந்து வட்டமிட்டு உணவு அருந்தி சென்றதாகவும், இதனால் இக்கோவில் பட்சிதீர்த்தம்' என்றும் அழைக்கப்பட்டது. இம்மலையை கிரிவலம் வருதல் மிகவும் சிறப்புடையது திருமலையைச் சுற்றி 12 தீர்த்தங்கள் உள்ளன.

தேர்த்திருவிழா

இக்கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கியத்திருவிழாவான 7-வது நாள் தேர்திருவிழா நேற்று நடைபெற்றது பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கிழக்கு கோபுர வாசல் வழியாக வந்த சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பத்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். கிழக்கு கோபுரவாசல் வழியாக வெளியே வந்து வேதகிரீஸ்வரர் 58 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதனைத்தொடர்ந்து விநாயகர் தேர் முதலில் செல்ல வேதகிரீஸ்வரர் தேர், திரிபுரசுந்தரி அம்பாள் தேர், வள்ளிதெய்வானை முருகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் எனத்தொடர்ந்து பஞ்சரத் தேர்களும் நான்கு மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கொட்டியமழையில் நனைந்தவாறு ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என பக்தி கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் சாலைகளில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்