திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் 150 அடி உயர கோபுரத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் 150 அடி உயர கோபுரத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-22 10:23 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தி்ல் புகழ்பெற்ற வேதகரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 4 ராஜகோபுரம் உள்ளது. இதில் 150 அடி உயரம் கொண்ட வடக்கு கோபுரத்தின் உச்சியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் ஏறியுள்ளார்.

அதை பார்த்த அந்த பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தீயணைப்பு துறை அலுவர் துரைராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி கோபுரத்தின் உச்சியில் ஏறிய மர்ம நபரை பத்திரமாக மீட்டு திருக்கழுக்குன்றம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து இந்து அறநிலையத்துறை செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் அளித்த புகாரின் பேரில் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கோபுரத்தின் உச்சியில் ஏறிய மர்ப நபர் திருக்கழுக்குன்றம் வன்னியர் தெருவை சேர்ந்த தினேஷ் (வயது 21) என்பதும் அவர் அந்த பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அங்கு அவருக்கு சரிவர சம்பளம் தராததாலும் அதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் மற்றும் தான் காதல் தோல்வியில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதனால் கோபுரத்தின் உச்சியில் ஏறியதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். மேலும் இவர் தற்கொலை செய்து கொள்வதற்காக கோபுரத்தின் மீது ஏறினாரா? அல்லது வேறு ஏதேனும் குற்ற சம்பவத்தில் ஈடுபட ஏறினாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்