தாகம் தீர்க்காத தாமிரபரணி தண்ணீர்

மாவட்ட மக்களின் தாகம் முழுவதுமாக தீராத நிலையே நீடிக்கிறது.

Update: 2022-09-24 20:37 GMT

விருதுநகர் மாவட்டத்தில் நகர் பகுதிகளும், கிராம பகுதிகளும் குடிநீர் தேவைக்கு தொடக்கத்தில் நிலத்தடி நீராதாரங்களை நம்பி இருந்தது. இந்தநிலையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த போதிலும் மாவட்ட மக்களின் தாகம் முழுவதுமாக தீராத நிலையே நீடிக்கிறது.

நிலத்தடி நீர் ஆதாரம்

விருதுநகர் மாவட்ட தலைநகரான விருதுநகர், ஆனைக் குட்டம் அணை, காரு சேரி, கல்குவாரி, ஒண்டிப்புலி கல்குவாரி போன்ற நிலத்தடி நீராதாரங்களை நம்பி இருந்த நிலையில் மழைக்காலங்களில் சுக்கிரவார்பட்டி கோடைகால குடிநீர் தேக்கத்தில் சேமித்து வைத்து கோடையில் பயன்படுத்தும் நடைமுறையும் இருந்து வந்தது.

இதேபோன்று அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளும் குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்த நிலையே நீடித்தது. இந்நிலையில் மாவட்டத்தில் முதன் முதலில் சாத்தூருக்கு நெல்லை மாவட்டம் சீவலப்பேரியிலிருந்து தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

வைகை தண்ணீர்

இதனை தொடர்ந்து சிவகாசி, திருத்தங்கல் பகுதிக்கு மானூர் கூட்டுக்குடிநீர்திட்டமும், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சிகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்து தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டமும் செயல்பாட்டிற்கு வந்தது. அருப்புக்கோட்டையை பொருத்தமட்டில் திருப்புவனத்தில் இருந்து வைகை தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் காலப்போக்கில் அந்தத்திட்டமும் பலன் இல்லாமல் போய்விட்டது.

விருதுநகரை பொருத்தமட்டில் நிலத்தடி நீர் ஆதாரங்களிலிருந்து வந்த குடிநீருடன் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து தினசரி 65 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து அதிகபட்சமாக தினசரி 35 லட்சம் முதல் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் நிலை இருந்து வந்தது.

குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு

அதிலும் பல நாட்கள் குழாய் உடைப்பு, மின் தடை போன்ற பல்வேறு காரணங்களால் தாமிரபரணி குடிநீர் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது. திட்டப்பணி நடைபெற்ற போது இதற்காக தனி மின்பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் அதனை அரசு கண்டு கொள்ளாத நிலையில் மின்தடை, குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தினாலும் கிராம பகுதிகளில் முழுமையாக பலன் பெறாத நிலையே நீடிக்கிறது. மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தேவைக்கேற்ப மக்களுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகமும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்