ஊத்துக்குளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகப்படும்படியான வகையில் வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப்பிடித்து விசாரித்த போது அவர் முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகன் சூர்யா பிரகாஷ் (வயது 25) என்பதும் கடந்த மாதம் 18-ந் தேதி செந்தில் நகர் பாண்டியன் என்பவரது மனைவி பேபி (40) மற்றும் கடந்த 7-ந் தேதி ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது மகன் ஹரிசுதன் (33) ஆகியோரது வீடுகளில் பூட்டை உடைத்து கியாஸ் சிலிண்டர் மற்றும் அரை பவுன் எடையுள்ள 4 சிறிய மோதிரங்களை திருடி சென்றது அவர்தான் என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த ஊத்துக்குளி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.