"திராவிட மாடலின் இரு கண்கள் இவை'' - முதல்-அமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

கல்வியும் மருத்துவமும் திராவிட ஆட்சியின் இரு கண்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-07 11:40 GMT

சென்னை, 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வியும் மருத்துவமும் திராவிட ஆட்சியின் இரு கண்கள் என்று கூறி தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் இரண்டு செய்திகளை பகிர்ந்துள்ளார்.

எக்ஸ் சமூகவலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி கூறுவதுண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில் இந்த வாரம் ஊடகங்களில் வெளியான இரு செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன்.

செய்தி 1:

நான் முதல்வன் திட்டத்தின்கீழ், 3300 அரசுப் பள்ளி மாணவர்கள் #CLAT தேர்வெழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணம் நான்காயிரம் ரூபாயை அரசே செலுத்தி, அவர்களுக்கு இலவசப் பயிற்சியையும் வழங்கவுள்ளது.

நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசின் உயர் பொறுப்புகளிலும் நமது மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக நாம் மேற்கொண்டு வரும் பல திட்டங்களில் ஒரு சிறுதுளிதான் இது.

செய்தி 2:

நாட்டிற்கே முன்னோடியாக 2009-இல் தலைவர் கலைஞர் அவர்கள் ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வழிகாட்டினார். 2015-16-இல்தான் ஒன்றிய அரசு இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது #CMCHIS-இல் நமது அரசு மருத்துவமனைகள் இந்தியாவிலேயே எந்த மாநிலமும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் பயனைடைந்தவர்களில் 50 விழுக்காட்டினர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இது நமது கல்வி, மருத்துவத் துறைகளின் சாதனைகளுக்கான சான்று மட்டுமல்ல; வெற்றி மணிமகுடம், என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்