அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்திய திருநங்கைகள்: பரபரப்பு சம்பவம்

எஸ்-7 பெட்டியில் இருந்து இறங்கிய 2 திருநங்கைகள் நடைமேடை வழியாக தப்பி ஓடினார்கள்.

Update: 2024-02-18 02:19 GMT

ஆரல்வாய்மொழி,

கன்னியாகுமரியில் இருந்து நேற்று ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு காலை 6.45 மணிக்கு ஆரல்வாய்மொழி ரெயில் நிலையம் வந்தது. இங்கு ரெயில் நிறுத்தம் கிடையாது என்பதால் நிற்காமல் சென்றது.

இந்த நிலையில் ரெயில் நிலைய அலுவலகத்தை தாண்டி சென்ற போது ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தப்பட்டது. உடனே ரெயிலின் கடைசி பெட்டியில் இருந்த ரெயில்வே அதிகாரி கீழே இறங்கி என்னமோ, ஏதோ என்று முன்பகுதி நோக்கி ஓடினார். இதனால் ரெயில் நிலையத்தில் வேறு ரெயிலுக்காக காத்திருந்தவர்கள் பதற்றமடைந்தனர். ரெயிலில் இருந்த பயணிகளும் கீழே இறங்கினர்.

அப்போது எஸ்-7 பெட்டியில் இருந்து இறங்கிய 2 திருநங்கைகள் நடைமேடை வழியாக தப்பி ஓடினார்கள். பயணிகளும், டிக்கெட் பரிசோதகரும் அந்த பெட்டியின் முன்பு நின்று கொண்டு இருந்தனர். அவர்களிடம் அதிகாரி விசாரித்தார்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து ரெயிலில் ஏறிய திருநங்கைகள் பயணிகளிடம் வலுக்கட்டாயமாக பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். இது பிடிக்காத சில பயணிகள் அவர்களை சத்தம் போட்டனர். இதனால் பயணிகளுக்கும், திருநங்கைகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து பயணிகளிடம் இருந்து தப்பிக்க ரெயிலின் அபாய சங்கிலியை திருநங்கைகள் பிடித்து இழுத்து நிறுத்தியது தெரிய வந்தது. இதனால் ஹவுரா எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் நின்றது. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும் ரெயில்களில் ஏறும் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், பணம் தர மறுப்பவர்களை தகாத வார்த்தைகள் பேசியும், சாபம் விடுவதும் பயணிகளை கோபப்பட வைக்கிறது. இதை தடுக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்