கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு

பண்ருட்டி அருகே தொகுப்பு வீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-27 18:45 GMT

தொகுப்பு வீடுகள்

பரங்கிப்பேட்டை அருகே அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் தங்களின் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க போவதாக கூறினர். இதை அறிந்த புதுநகர் போலீசார், அவர்களிடம் இது பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் அரியகோஷ்டி கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 288 அடுக்குமாடி தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடைபெற்றது. இதில் பயனாளி தேர்வில் முறைகேடு நடந்ததால், மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரித்து, தகுதியற்ற பயனாளிகளை நீக்கி உள்ளனர். தற்போது 106 வீடுகள் நிலுவையில் உள்ளது. இந்த வீடுகளை சொந்த வீடு இல்லாத எங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டிற்கான பங்களிப்பு தொகையும் கட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். வீடுகள் ஒதுக்கவில்லை என்றால் எங்களின் ரேஷன் மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைப்போம் என்றனர்.

கலெக்டரிடம் மனு

இதை கேட்ட போலீசார், இது பற்றி கலெக்டரிடம் நேரிடையாக மனு அளிக்க அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து மனு அளித்து விட்டு சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்