மின்கம்பங்கள் சாய்ந்து டேங்கர் லாரி மீது உயர்மின் அழுத்த கம்பிகள் விழுந்ததால் பரபரப்பு - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

லாரியில் ஏற்றி வந்த டிரான்ஸ்பார்மரில் மின்வயர் சிக்கி, 2 மின்கம்பங்கள் சாய்ந்தது. இதில் பின்னால் வந்த டேங்கர் லாரி உள்ளிட்ட வாகனங்கள் மீது உயர்மின் அழுத்த கம்பிகள் விழுந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

Update: 2022-11-01 09:43 GMT

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து டிரான்ஸ்பார்மரை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று காலை சென்னை போரூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு வந்தது. போரூர் அடுத்த சமயபுரம் சாலை வளைவில் திரும்பும்போது மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பி, லாரியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் சிக்கிக்கொண்டது.

இதை கவனிக்காமல் லாரியை டிரைவர் தொடர்ந்து ஓட்டியதால் உயர்மின் அழுத்த கம்பியை இழுத்தபடி சென்றது. இதனால் அங்கிருந்த 2 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாயந்தன.

அதில் இருந்த உயர்மின் அழுத்த கம்பிகள், லாரிக்கு பின்னால் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மற்றும் கார்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது விழுந்தது. டேங்கர் லாரி மீது மின்கம்பத்தோடு சேர்ந்து உயர்மின் அழுத்த கம்பிகள் விழுந்ததும் தீப்பொறிகள் பறந்தன. மேலும் டேங்கர் லாரி மூடியிலும் லேசாக தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டேங்கர் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் கீழே இறங்கி தப்பி ஓடினர். அதற்கு பின்னால் காரில் வந்தவர் உடனடியாக காரை விட்டு இறங்கி அதில் வந்த பெண் மற்றும் குழந்தையுடன் அவசரம் அவசரமாக கீழே இறங்க செய்து ஓடினார். மேலும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் லாரிகளுக்கு பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் அலறி அடித்து ஓடினர்.

இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள், உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். டேங்கர் லாரியில் பெட்ரோல் இருந்ததால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அங்கு மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்களும் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்தனர்.

நல்லவேளையாக டேங்கர் மூடி மற்றும் வால்வை நன்றாக மூடி இருந்ததால் அதிர்ஷ்டவசமாக தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை. ஒருவேளை டேங்கர் லாரியில் உள்ள பெட்ரோலில் தீப்பிடித்து எரிந்து இருந்தால் டேங்கர் லாரி வெடித்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்க கூடும். அதி்ர்ஷ்டவசமாக அதுபோல் ஏதும் நடக்கவில்லை.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை சீரமைத்தனர். சாய்ந்து கிடந்த 2 மின்கம்பங்களையும் அகற்றி விட்டு மாற்று மின்கம்பங்கள் அமைத்து, மீண்டும் மின் இணைப்பு கொடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

இலகுரக வாகனங்கள் செல்லக்கூடிய சாலையில் கனரக வாகனங்கள் சென்றதே இந்த விபத்துக்கு காரணம். இந்த பகுதியில் பல்வேறு மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதனை மாற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்