தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை; 32 மருத்துவ கிடங்குகளில் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. 32 மருத்துவ கிடங்குகளில் யார் வேண்டுமானாலும் சென்று ஆய்வு செய்யலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உள் விளையாட்டு அரங்கம்
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் லட்சுமி ஹயக்ரீவர் நகர் 3-வது குறுக்கு தெருவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.58 லட்சத்தில் உள் விளையாட்டு அரங்கம் கட்டுமானப்பணி தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மண்டல குழு தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர் மகேஸ்வரி முருகவேல், மண்டல செயற் பொறியாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
மருந்து தட்டுப்பாடு
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு தந்து உள்ளார். சேலத்தில் மருந்து தட்டுப்பாடு என கூறிய 4 மணி நேரத்தில் அங்கு சென்று ஆய்வு செய்தேன். அங்கு எடப்பாடி பழனிசாமி தட்டுப்பாடு என கூறிய மருந்துகளை எடுத்து காட்டி இதுவா தட்டுப்பாடு? என்றேன். அவர் சொன்னதை கிளி பிள்ளைப்போல் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் மருத்து தட்டுப்பாடு என கூறுகின்றனர்.
யாரும் ஆய்வு செய்யலாம்
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. தமிழகத்தில் 32 மருந்து சேமிப்பு கிடங்குகள் உள்ளன. எந்த கிடங்கிற்கு வேண்டுமானாலும் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் சென்று மருந்து இருப்பு அறிக்கையை ஆய்வு செய்யலாம். பொது மக்களுக்கு எந்த மருந்து தட்டுப்பாடு இருந்தாலும் 104 என்ற எண்ணுக்கு போன் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி வெளிப்படை தன்மையுடன் நிர்வாகம் நடத்தப்படுகிறது.
கேவலப்படுத்துவது...
எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு பெண் வெளியேறியதை கூடவா? டாக்டர்களின் அலட்சியம் என்பது. மருத்துவ துறையின் கட்டமைப்பை கேள்விக்குறியாக்க வேண்டும் என்பது போல் உள்ளது. அதிகாலை 3 மணிக்கு பெண் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி சென்று தண்டவாளத்தில் அடிப்பட்டு இறந்ததற்கு டாக்டர்கள்தான் அவரை தள்ளிவிட்டு கொன்றதை போன்ற தோற்றத்தை உருவாக்குவது மருத்துவ சேவையை கேவலப்படுத்துவது போல் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.