ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசுபடும் அபாயம்-சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
ஆனைமலை
ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
ஆற்றில் கலக்கும் கழிவுநீர்
ஆனைமலை அருகே 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து வரும் தண்ணீர் கோட்டூர், ஆனைமலை, அம்பராம்பாளையம், மணக்கடவு வழியாக கேரளாவை சென்றடைகிறது. இதில் ஆனைமலை பேரூராட்சி குடிநீர் திட்டம் உள்பட 8 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆனைமலை பேரூராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள கால்வாய் வழியாக உப்பாறும், ஆழியாரும் ஒன்று சேரும் இடத்தில் தினசரி 6 லட்சம் லிட்டர் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசுபடும் அபாயம் நிலவுகிறது. மேலும் அந்த தண்ணிரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்ேவறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சுத்திகரிப்பு நிலையம்
மேலும் 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுத்திகரிப்பு நிலையமும் பயன்பாட்டில் இல்லை. இதனால் கழிவுநீர் நீர் நேரிடையாகவே ஆற்றில் கலக்கிறது. எனவே அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- ஆனைமலை பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக ஆனைமலை ஆறு உள்ளது. கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலப்பதால் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் படர்கிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டிலிருந்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இடம் தேர்வு மட்டுமே செய்யப்பட்டது. அடுத்த கட்ட பணிகள் மந்தமான நிலையில் உள்ளது.
ரூ.3 கோடியே 72 லட்சம் மதிப்பீடு
எனவே உயர் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் கூறியதாவது:- ஆழியாறு பூங்கா அருகில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கபட உள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ..3 கோடியே 72 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.