குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களின் முன்புறம் மற்றும் பின்புறம் பிரதான பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு பஸ்களில் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகளில் பஸ்கள் புறப்படும் இடம், சேரும் இடம் மற்றும் தடம் எண் எழுதப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பஸ்களில் பிரதான பெயர் பலகைகளுக்கும், கண்ணாடிகளில் எழுத்தப்பட்டுள்ள ஊர் பெயர்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது.
குறிப்பாக அருமனையில் இருந்து நாகர்கோவில் செல்லும் தடம் 318 பஸ்சின் கண்ணாடியில், தடம் எண் 310 நாகர்கோவில் - வள்ளவிளை என எழுத்தப்பட்டுள்ளது. மேலும் கடையாலுமூட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் தடம் எண் 576 பஸ்சின் கண்ணாடியில், தடம் எண் 332 குளச்சல் - குலசேகரம் என்று எழுதப்பட்டுள்ளது.
இதுபோல் எண்ணற்ற பஸ்கள் குளறுபடியான பெயர் பலகைகளுடன் இயங்குகின்றன. இதனால் வயதான பயணிகள் பஸ்களில் ஏறி விட்டு ஏமாற்றத்துடன் இறங்கும் நிலை ஏற்படுகிறது.
இதுபோல் டவுன் பஸ் தடத்தில் இயக்க வேண்டிய பஸ்களுக்கு பதிலாக புறநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து பயணிகள் நலச்சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'ஒரு தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் பழுதானாலோ அல்லது வருடாந்திர பாராமரிப்புப் பணிகளுக்கு சென்றாலோ அந்த தடத்தில் வேறு பஸ்கள் இயக்கப்படுவது வாடிக்கையானது தான். ஆனாலும், குமரி மாவட்டத்தில் தற்போது பல தடங்களில் பஸ்கள் மாற்றி இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் பஸ்களில் ஏறி விட்டு இறங்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
ஒரு பஸ் பழுதானாலோ அல்லது வேறு காரணங்களுக்காக மாற்றப்பட்டாலோ அதன் கண்ணாடிகளில் எழுத்தப்பட்டுள்ள ஊர்களின் பெயர்களை தற்காலிமாக காகிதம் ஒட்டி மறைக்க வேண்டும். இதனை போக்குவரத்துக் கழக நிர்வாகம் செய்வதில்லை. எனவே போக்குவரத்துக் கழகம் பயணிகளின் நலனில் அக்கறை கொண்டு பஸ்களின் பெயர் பலகைகளில் குளறுபடி இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.