சென்னை சைதாப்பேட்டையில் மின்சார ரெயில் பெட்டிகள் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு

சென்னை சைதாப்பேட்டையில் மின்சார ரெயில் பெட்டிகள் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடற்கரை-தாம்பரம் இடையே 2 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Update: 2023-05-16 23:36 GMT

சென்னையின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை திகழ்கிறது. குறைவான கட்டணம், விரைவான பயணம் காரணமாக பெரும்பாலானவர்களின் தேர்வு மின்சார ரெயில் பயணமே.

இதற்கிடையே சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் செங்கல்பட்டு நோக்கி புறநகர் மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தை காலை 5.30 மணி அளவில் வந்து நின்றது.

அங்கு பயணிகள் இறங்கிய பின்னர் மீண்டும் அந்த ரெயில் புறப்பட்டது. அப்போது 12 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலின் 4 பெட்டிகள் மட்டும் கழன்று பின்னால் ஓடின.

மற்ற 8 பெட்டிகள் முன்னோக்கி சென்றது. ரெயில் சிறிது தூரம் சென்றதும், இதனை கவனித்த ஓட்டுனர் உடனே ரெயிலை நிறுத்தினார். அவர் இறங்கி பார்த்தபோது, ரெயில் பெட்டிகளை ஒன்றாக சேர்க்கும் இணைப்பு அச்சு உடைந்து கேபிள் அறுந்ததால் பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது தெரியவந்தது. ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டு ரெயிலை உடனே நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

முன்னதாக ரெயில் பெட்டிகள் தனியாக கழன்று செல்வதை பார்த்த பயணிகள் அலறினர். இதன் காரணமாக சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வழியாக செல்லும் (கடற்கரை-தாம்பரம் மார்க்கம்) மின்சார ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

மின்சார ரெயில் இரண்டாக பிரிந்து சென்றது தொடர்பாக ரெயில்வே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரமாக மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.

இதற்கிடையே கழன்று சென்ற ரெயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டதால் இணைப்பு பணி கைவிடப்பட்டது.

இதையடுத்து கழன்ற ரெயில் பெட்டிகள் தாம்பரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் மீதமுள்ள 8 ரெயில் பெட்டிகளும் பாதிபாதியாக அதாவது 4, 4 ஆக பிரித்து தனித்தனியாக பிரிக்கப்பட்டு தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி காலை 7.45 மணிக்கு முடிவடைந்தது. அதன்பின்னர் கடற்கரை-தாம்பரம் இடையே மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது. ரெயில் சேவை பாதிப்பு காரணமாக அலுவலகம் செல்வோரும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் குறித்த நேரத்திற்கு அலுவலகம் செல்ல இயலவில்லை. மின்சார ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சைதாப்பேட்டையில் ரெயில் பெட்டிகள் கழன்று சென்ற சம்பவம் காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால், ரெயிலுக்கு செல்ல காத்திருந்த பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி சென்ற பயணிகள் ரெயில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நேற்று காலை நின்று சென்றது.

ரெயில்வே நிர்வாகத்தின் இந்த திடீர் நடவடிக்கை பயணிகளுக்கு சற்று ஆறுதலாக அமைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்