தேனி அரசு மருத்துவமனையில்தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை முயற்சி:உறவினர்கள் மேலாளரை தாக்கியதால் பரபரப்பு

தேனி அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவரது உறவினர்கள் மேலாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-26 18:45 GMT

தேனி அரசு மருத்துவமனை

ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் 380 தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர்.

இந்த தனியார் நிறுவனத்தின் மேலாளராக இருந்தவரை பணி நீக்கம் செய்துவிட்டு, தற்போது மேற்பார்வையாளராக உள்ள கருப்பசாமி என்பவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு தற்காலிக மேலாளர் பொறுப்பேற்று கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு தனியார் நிறுவன பணியாளர்களின் ஒரு பிரிவினர் கருப்பசாமி மேலாளர் பணியை தொடர கூடாது என்று கடந்த 9-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தற்கொலை முயற்சி

இதனால் கருப்பசாமி மீண்டும் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் கருப்பசாமி மீது தனியார் நிறுவன மேல்அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று பணிக்கு வந்த கருப்பசாமி அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மேல் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் அளித்ததால் தான் கருப்பசாமி விஷம் குடித்ததாக உறவினர்கள் கூறினர். இதையடுத்து அவர்கள், மேலாளர் அக்னீசிடம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்