பெண்ணிடம் நூதன முறையில் 12½ பவுன் நகைகள் திருட்டு
பெண்ணிடம் நூதன முறையில் 12½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
ரேஷன் கடைக்கு...
திருச்சி கிராப்பட்டி, கான்வென்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவருடைய மனைவி ஹேமலதா (வயது 54). இவர் நேற்று காலை அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வெள்ளை நிற சட்டை மற்றும் காக்கி நிற பேண்ட் அணிந்து வந்த 2 பேர், ஹேமலதாவை வழிமறித்து தாங்கள் போலீஸ் என்று கூறினர்.
பின்னர் அவர்கள், நகைகளை அணிந்து சாலையில் சென்றால் மர்ம ஆசாமிகள் அதனை பறித்து சென்று விடுவார்கள். எனவே நகைகளை கழற்றி தாருங்கள். நாங்கள் அதை பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம் என்று கூறி ஹேமலதா அணிந்திருந்த 7½ பவுன் தாலிச்சங்கிலி மற்றும் 5 பவுன் எடை கொண்ட 2 வளையல்கள் பெண்ணிடம் நூதன முறையில் 12½ பவுன் நகைகள் திருட்டுஎன மொத்தம் 12½ பவுன் நகைகளை பெற்றுக்கொண்டனர்.
வலைவீச்சு
பின்னர் அதனை ஒரு பையில் போட்டு ஹேமலதாவிடம் கொடுத்து இதை வழியில் பிரிக்காமல் வீட்டுக்கு சென்று பிரித்து பார்க்குமாறு கூறியுள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய அவரும் வீட்டுக்கு சென்று பையை பிரித்து பார்த்தபோது பையில் கற்கள் மற்றும் கவரிங் வளையல்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து அருகே உள்ள எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.