தர்மபுரி:
பாப்பாரப்பட்டியில் பாலக்கோடு மெயின் ரோட்டில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மின் விநியோகம் பெற்று வந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் அங்கு சென்று, டிரான்ஸ்பார்மரில் மின்சார விநியோகத்தை நிறுத்தினர். பின்னர் மின் இணைப்பை துண்டித்து, அதில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான செம்பு கம்பிகள் மற்றும் ஆயிலை திருடி சென்றனர். இதனால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி மின்சார வாரிய உதவி பொறியாளர் செந்தில்குமார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரான்ஸ்பார்மரில் செம்பு கம்பி, ஆயிலை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.