புது வாங்கலம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம்

வாங்கல் புது வாங்கலம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-01-23 18:30 GMT

தீர்த்தக்குடம்-முளைப்பாரி ஊர்வலம்

கரூர் காவிரி நதியின் தென்கரையில் வாங்கல் கிராமத்தில் வரகுண்ணா பெருங்குடி குல குடிப்பாட்டு மக்களுக்கு குலதெய்வமாக புது வாங்கலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 14 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து தற்போது கோவில் புனரமைப்பு செய்யப்பட்டது. அப்போது கோவில் உட்புறம் சப்த கன்னிமார்கள் சிலை பிரதிஷ்டை செய்தும், கோபுரங்கள் பொன் வர்ணம் தீட்டியும், பல திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்றது. இதையடுத்து நாளைமறுநாள் (வியாழக்கிழமை) காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையடுத்து நேற்று கரூர்- கோவை ரோட்டில் உள்ள பிரேம் மகாலில் கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருச்சி பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் ஒன்றாக கூடினர். பின்னர் அங்கிருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து யானை, குதிரை, மாட்டுவண்டி மற்றும் மங்கல இசையுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் கரூர் - கோவை சாலையில் இருந்து தொடங்கி பஸ் நிலையம், ரவுண்டானா, ஜவகர் பஜார், மாரியம்மன் கோவில் வீதி, ராஜாஜி தெரு, ஐந்து ரோடு, அரசு காலனி உள்பட முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. இதையடுத்து கும்பாபிஷேகம் நேற்று மாலை முதல்கால யாகபூஜையுடன் தொடங்கியது.

கும்பாபிஷேகம்

தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8:30 மணிக்கு 2-ம் கால பூஜையும், மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகபூஜையும், நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு 4-ம் கால யாகபூஜையும், மாலை 5.30 மணிக்கு 5-ம் கால யாகபூஜையும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 6-ம் கால யாகபூஜையை தொடர்ந்து காலை 8.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நாளை மாலை முதல் நாளை மறுநாள் மாலை 4 மணி வரை அன்னதானம் நடைபெறுகிறது. இதற்காக 4 இடங்களில் பிரமாண்ட அன்னதான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்தா டாக்டர் சிவக்குமார், திருப்பணி குழுத்தலைவர் வீரப்பன் ஆகியோர் செய்துள்ளனர். கும்பாபிஷேகத்தையொட்டி வாங்கல் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனால் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக கும்பாபிஷேகம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில் மண்டபத்தில் இளைஞர் அணி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இதற்கு சேரன் பள்ளி முதல்வர் பழனியப்பன் தலைமை தாங்கினார். தங்கராஜ் முன்னிலை வகித்தார். வக்கீல் பொன்னுச்சாமி வரவேற்று பேசினார்.

கும்பாபிஷேகத்திற்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் அன்னதான மண்டபம் அமைத்தல், குடிதண்ணீர் வசதி, கார் பார்க்கிங் வசதி, கூட்டங்களை கட்டுப்படுத்துதல் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்