விநாயகர் சிலையை கரைக்க சென்ற வாலிபர் தடுப்பணையில் மூழ்கி பலி

வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற வாலிபர் அணையில் மூழ்கி பலியானார். மற்றொருவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

Update: 2023-09-20 17:55 GMT

அணையில் மூழ்கினர்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி தாயப்பன் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் முரளி (வயது 24). இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் தனது நண்பர்களுடன் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணையில் விநாயகர் சிலையை கரைத்துள்ளார்.

பின்னர் நண்பர்களுடன் அணையின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் நீரில் மூழ்கி உள்ளார்.

அதேபோன்று ஜோலார்பேட்டையை அடுத்த கோனேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பூவரசன் (22) என்பவரும் தனது உறவினர்கள், நண்பர்களுடன் அதே அணைப்பகுதியில் விநாயகர் சிலையை கரைத்து விட்டு கரையின் மீது சென்று கொண்டிருந்தபோது அணையில் தவறிவிழுந்து நீரில் மூழ்கியிருக்கிறார்.

வாலிபர் பலி

இதனை கண்ட அங்கிருந்தவர்கள், நீரில் மூழ்கிய இருவரையும் காப்பாற்ற முயன்றபோது பூவரசனை மட்டுமே பிணமாக மீட்டனர். அவரது உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீரில் மூழ்கிய முரளியை இரவு 7 மணி வரையில் தேடியும் மீட்க முடியவில்லை. இதனால் தேடும்பணி கைவிடப்பட்டது. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

இது குறித்து குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மூன்று மாதத்தில் இந்த தடுப்பணையில் மூழ்கி 15 பேர் இறந்துள்ளனர். இனியாவது தமிழக, ஆந்திர அரசுக்கள் இந்த தடுப்பணை பகுதியில் போதிய பாதுகாப்பினை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்