தொழிலாளிக்கு சரமாரி கத்திக்குத்து

திருமண செலவுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் தொழிலாளிக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. இதுதொடா்பாக மகனுடன் முதல் மனைவி கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-05-13 19:15 GMT

கள்ளக்குறிச்சி;

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு(வயது 48). தொழிலாளி. இவருக்கு பொன்னம்மாள்(35), கன்னியம்மாள்(24) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேலுவை விட்டு பிரிந்த பொன்னம்மாள், தனது மகன் ராமு என்கிற தசரதராமன்(22), 2 பெண் குழந்தைகளுடன் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் வசித்து வருகிறார். வேலு, 2-வது மனைவி கன்னியம்மாளுடன் ரங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வேலு, நேற்று காலை தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ராமுவுடன் அங்கு வந்த பொன்னம்மாள், மகள் திருமண செலவுக்கு பணம் கேட்டார். அதற்கு அவர் மறுத்ததால் ராமு தான் எடுத்து வந்த கத்தியால் வேலுவின் நெஞ்சில் 6 முறை குத்தி உள்ளார். இதனை தடுக்க வந்த கன்னியம்மாளையும் அவர்கள் அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். கன்னியம்மாள் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே ராமுவும், பொன்னம்மாளும் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனை தொடர்ந்து கத்தி குத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த வேலு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கன்னியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமு, பொன்னம்மாள் ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்