செல்போன் தொலைந்து போனதால் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி மிரட்டல்

செல்போன் தொலைந்து போனதால் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி மிரட்டல் விடுத்தார்.;

Update: 2023-06-02 09:33 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் அய்யனேரி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 44). தனியார் முதியோர் இல்லத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யசோதா (38). இவருக்கு பிரியா (20), கோடீஸ்வரி (17) என்ற மகள்களும், சீனிவாசன் (18) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் முனுசாமி பக்கத்து ஊரான வீராணத்தூர் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவை காண நேற்று முன்தினம் இரவு சென்றார்.

அங்கு திருவிழாவை பார்த்து முடித்த பிறகு ஓரிடத்தில் படுத்து தூங்கிவிட்டார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது அவரிடம் இருந்த செல்போனை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். செல்போனை தேடி அந்த கிராமத்தில் வீடு வீடாக சென்று விசாரித்தார். ஆனால் செல்போன் கிடைக்கவில்லை.

இதனால் மனவேதனையடைந்த முனுசாமி அந்த கிராமத்தில் இருந்த செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று கொண்டு குதித்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். முனுசாமியுடன் நைசாக பேசிக்கொண்டு ஒரு போலீஸ்காரர் செல்போன் கோபுரத்தின் மேல் ஏறி அவரை அங்கிருந்து கீழே இறக்கி ஆர்.கே. பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தார். அதில் தனது செல்போன் தொலைந்து போனதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செல்போன் கோபுரத்தின் மேல் ஏறிவிட்டேன் என்று முனுசாமி தெரிவித்தார். இனிமேல் இதுபோல் செய்ய மாட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்