சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓய்வறை அமைக்கும் பணி தொடக்கம்
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓய்வறை அமைக்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பணியாளர்கள் ஓய்வறை அமைக்கும் பணி, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி சுத்தப்படுத்தும் எந்திரம் அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலாசங்கரபாண்டியன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உதய கிருஷ்ணன், சங்கரன்கோவில் யூனியன் துணை தலைவர் தமிழ்செல்வி முன்னிலை வகித்தனர்.
அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன் வரவேற்றார். தென்காசி எம்.பி. தனுஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன் திருமலைகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஓய்வறை மற்றும் தானியங்கி சுத்தப்படுத்தும் எந்திரம் நிறுவும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மிகப்பெரும் சீரழிவை சந்தித்த போக்குவரத்து கழகம், தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தன்னிறைவு பெற்று திகழ்கின்றது. பெண்களுக்கான இலவச பஸ் சேவை மூலம் ஏற்படும் நஷ்டத்திற்கான தொகை கடந்த ஆண்டு ரூ.1,800 கோடியும், இந்த ஆண்டில் ரூ.2,800 கோடியும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு முதல்-அமைச்சர் கொடுத்துள்ளார். இன்னும் சில மாதங்களில் அனைத்து பணிமனைகளிலும் காலியிடங்களை நிரப்ப முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.
2006 முதல் 2011-ம் ஆண்டு வரை கருணாநிதி ஆட்சி காலத்தில் 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 14 ஆயிரம் பஸ்கள் மட்டுமே வாங்கப்பட்டு உள்ளது. தற்போது மாநில அரசின் நிதி மற்றும் ஜெர்மன் வங்கி நிதி மூலம் புதிய பஸ்கள் சில மாதங்களில் வாங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் அரசு போக்குவரத்து கழகம் புத்துணர்ச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, வெற்றிவிஜயன், தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.