மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணையை புனரமைக்கும் பணிகள் தீவிரம்

மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணையை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-02-15 19:11 GMT

மாயனூர் கதவணை

கரூர் மாவட்டம், மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே 1232 மீட்டர் நீளமுள்ள 98 ஷட்டர்களை கொண்ட கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணை கடந்த 2014-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கதவணை 4.63 லட்சம் கனஅடி வெள்ளநீர் வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வரும் வெள்ள உபரி நீரினை திசை திருப்பி காவிரி, அக்னி ஆறு, தெற்கு வெள்ளாறு, வைகை, குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கும் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு வழங்குவதற்காகவும் இந்த கதவணை கட்டப்பட்டுள்ளது.

1.72 லட்சம் ஏக்கர்...

மேலும் கதவணையின் இடது புறம் மற்றும் வலது புறம் உள்ள பாசன வாய்க்கால்களான கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் கால்வாய், வடகரை வாய்க்கால் ஆகிய பாசன வாய்க்கால்கள் மூலம் 1.72 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இவ்வாறு உள்ள இக்கதவணையில் 1.05 டி.எம்.சி. தண்ணீர் தேக்குவதன் மூலம் அவற்றின் இரு கரையோரம் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, பல மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

பணிகள் தொடக்கம்

இந்தநிலையில் கடந்த 2015, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மூலம் அதிகபட்சமாக 2.47 லட்சம் கன அடி தண்ணீர் கதவணை மூலம் வெளியேற்றப்பட்டது. இந்த வெள்ள பெருக்கின் காரணமாக கதவணையின் அடித்தள கட்டமைப்புகளில் சேதம் ஏற்பட்டு 4 ஷட்டர்களில் நீர்க்கசிவு ஏற்பட்டது. மேலும் சில பகுதிகளில் கதவணையின் கீழ் புறம் போடப்பட்டுள்ள கான்கிரீட் தளம் சேதமடைந்தும் காணப்பட்டது. எனவே கதவணையில் பெரிய பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக அவற்றை தடுத்து சரி செய்யும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு ரூ.185 கோடியே 26 லட்சம் மதிப்பில் கதவணையை புனரமைக்கும் பணி ெதாடங்கப்பட்டது.

மீண்டும் தொடக்கம்

ஆனால் தொடர்ந்து காவிரி ஆற்றில் பாசனத்திற்கு நீர் திறப்பு மற்றும் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது பருவ காலங்கள் முடிந்த நிலையில் பாசனத்திற்கு நீர் திறப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது மீண்டும் கதவணையை புரனமைக்கும் பணி தொடங்கி விரைவாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் தற்போது 55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது, எஞ்சிய பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்