விளைநிலங்களை தயார்படுத்தும் பணி மும்முரம்

கோத்தகிரியில் 2-ம் போக மலைக்காய்கறி சாகுபடிக்கு விளைநிலங்களை உரமிட்டு தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-07-02 19:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் 2-ம் போக மலைக்காய்கறி சாகுபடிக்கு விளைநிலங்களை உரமிட்டு தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காய்கறி சாகுபடி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக, அறுவடை செய்த விளைநிலங்களில் மீண்டும் 2-ம் போக விவசாயம் செய்வதற்காக விளைநிலத்தில் உள்ள மண்ணை உழுது பதப்படுத்தி வருகின்றனர். விளைநிலங்களில் இயற்கை மற்றும் ரசாயன உரங்களை மண்ணுடன் கலந்து மீண்டும் விவசாயம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இயற்கை உரம்

இதுகுறித்து கோத்தகிரி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது, தொடர் மழை காரணமாக நிலத்தில் டிராக்டர் கொண்டு உழுவதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் கடந்த ஒரு மாதமாக விவசாயம் செய்யாமல் இருந்தோம். தற்போது காய்கறி மண்டிகளில் பூண்டு, கேரட் உள்ளிட்ட மலை காய்கறிகளுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருகிறது.

எனவே, மீண்டும் விவசாயம் செய்ய உள்ளதால், மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டி, ரசாயன உரத்துடன், இயற்கை சாண உரங்களையும் வாங்கி விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்தால் காய்கறி சாகுபடி அதிகரிக்கிறது. ஒரு லாரி சாண உரம் ரூ.30 ஆயிரம் ஆகிறது. ஒரு ஏக்கருக்கு ஒன்று முதல் 3 லாரி சாண உரம் தேவைப்படுகிறது. இயற்கை உரமிடுவதன் மூலம் மண்ணின் வளம் மேம்படுவதோடு, மகசூலும் அதிரிக்க வாய்ப்பு உள்ளது. என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்