விழுப்புரம் பகுதிகளில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்

விழுப்புரம் பகுதிகளில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-25 15:12 GMT

விநாயகர் சதுர்த்தி

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி வந்து வீடுகளில் வைத்து வழிபட்டனர்.

தற்போது கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதற்காக நகர்ப்புறம் மட்டுமின்றி அனைத்து கிராமப்புறங்களிலும் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.

விதவிதமான வடிவங்களில்...

இதையொட்டி கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் அருகே அய்யூர்அகரம், அய்யங்கோவில்பட்டு, ராகவன்பேட்டை, சாலைஅகரம், கோலியனூர், பனையபுரம், சிந்தாமணி, வளவனூர், திருவாமாத்தூர், அரசூர், சித்தலிங்கமடம், அங்குசெட்டிப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான கைவினை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிவன், பார்வதியுடன் இருப்பது போன்ற விநாயகர், 3 தலையுடன் இருக்கும் விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர், மாட்டு வண்டிகளில் அமர்ந்தபடி செல்வது போன்ற விநாயகர், ஐந்துமுக சிங்க விநாயகர், நந்தி விநாயகர், பாகுபலி விநாயகர், மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போன்ற விநாயகர், வலம்புரி விநாயகர், குபேந்திரருடன் இருக்கும் விநாயகர், 5 தலை நாகத்துடன் இருக்கும் விநாயகர் உள்ளிட்ட பலவித கலைநயத்துடன், பல்வேறு அவதாரங்களில் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி

தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சிலைகளை வாங்க இப்போதே சிலைகள் தயார் செய்யப்படும் இடத்திற்கு பொதுமக்கள் நேரில் சென்று தங்களுக்கு பிடித்தமான சிலைகளை பார்த்து முன்பதிவு செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் விழுப்புரம் பகுதியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சிலைகள் அனுப்பும் பணி தொடங்கும் என்று கைவினை தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்