தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 11 மாத குழந்தை சாவு

பெருந்துறை அருகே தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 11 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது. இதில் குழந்தையின் உடலை போலீசுக்கு தெரியாமல் புதைத்ததால் பிரேத பரிசோதனைக்காக பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

Update: 2023-08-14 00:19 GMT

பெருந்துறை

பெருந்துறை அருகே தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 11 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது. இதில் குழந்தையின் உடலை போலீசுக்கு தெரியாமல் புதைத்ததால் பிரேத பரிசோதனைக்காக பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

வாளி தண்ணீருக்குள்...

ஈரோடு மாவட்டம் பெருந்துைறயை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் தாய் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகமணி (28). இவர்களுடைய மகன்கள் ஜிஷ்ணு (8), ஆகாஷ் (11 மாதம்).

கடந்த 10-ந் தேதி இரவு 7.30 மணி அளவில் அந்த பகுதியில் டியூசன் படிக்க சென்ற ஜிஷ்ணுவை வீட்டுக்கு அழைத்து வர நாகமணி சென்றுவிட்டார். வீட்டில் சதீஷ்குமார் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் இருந்த ஆகாஷ் தவழ்ந்து சென்று வீட்டில் வைக்கப்பட்டிருந்த 20 லிட்டா் கொள்ளளவு கொண்ட வாளி தண்ணீருக்குள் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டான்.

சாவு

இதில் அவன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டான். இந்த நிலையில் மீண்டும் நாகமணி வீட்டுக்கு வந்தபோது வாளி தண்ணீரில் ஆகாஷ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவருடைய கதறல் சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த சதிஷ்குமாரும் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் ஆகாசை தூக்கி கொண்டு பெருந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சதீஷ்குமார் சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்ைத ஆகாஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தோண்டி எடுப்பு

இதைத்தொடர்ந்து ஆகாசின் உடலை வீட்டின் அருகே உள்ள சுடுகாட்டில் குழி தோண்டி அவனுடைய பெற்றோர் புதைத்து விட்டனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் விரைந்து சென்று குழியை தோண்டி ஆகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உடல் இன்று (திங்கட்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்